HPV சுயப் பரிசோதனைக் கருவிகள்: எவ்வாறு பயன்படுத்துவது (Copan) (Tamil)
வெளியிடப்பட்டது 24 ஆகஸ்ட் 2026
Applies to England
$CTA HPV சுயப் பரிசோதனைக் கருவியைக் கோரியதற்கு நன்றி.
இந்த HPV சுயப் பரிசோதனைக் கருவி உங்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது வேறு யாராலும் பயன்படுத்தவோ கூடாது.
உங்கள் கருவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்களுக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால் (எடுத்துக்காட்டாக, உடல் சார்ந்த அல்லது கற்றல் சார்ந்த குறைபாடு காரணமாக), 0300 303 2724 என்ற எண்ணை அழைக்கவும்.
மாதவிடாய் காலத்தில், கர்ப்பமாக இருக்கும்போது அல்லது கர்ப்பம் ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள், அல்லது மகளிருக்கான மருத்துவ அறுவைச் சிகிச்சை செய்த மூன்று மாதங்களுக்குள் உங்கள் மாதிரியைச் சேகரிக்க வேண்டாம்.
உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு முந்தைய 3 நாட்களில், யோனி மாத்திரைகள், யோனி கருத்தடைச் சாதனங்கள், கிரீம்கள், கழுவும் திரவங்கள், உயவுப்பொருட்கள் அல்லது ஆணுறைகள் பயன்படுத்தியிருந்தால், உங்கள் மாதிரியைச் சேகரிக்க வேண்டாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து கவலை இருந்தாலோ அல்லது புதிதாக ஏதேனும் அறிகுறிகள் அல்லது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இருந்தாலோ, உங்கள் மாதிரியைச் சேகரிக்க வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் GP-ஐ (பொது மருத்துவரை) தொடர்பு கொள்ளவும். அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
-
உடலுறவின்போது அல்லது உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய் காலங்களுக்கு இடையில், அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு.
-
உடலுறவின்போது வலி
-
வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் அல்லது வழக்கத்திற்கு மாறான நாற்றம் கொண்ட யோனிச் சுரப்பு.
இந்த அறிகுறிகள் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் கண்டறியப்படும் வரை, உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம்.
சுயபரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள், வழங்கப்பட்ட திருப்பி அனுப்பும் உறையைப் பயன்படுத்தி உங்கள் பரிசோதனையைத் திருப்பி அனுப்பவும்.
14 நாட்களுக்குள் உங்கள் முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலோ, சுயபரிசோதனை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, அல்லது உங்கள் தொகுப்பு சேதமடைந்து வந்தாலோ, 0300 303 2724 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
NHS கர்ப்பப்பை வாய் பரிசோதனை திட்டம் $CTA
இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளவை
முக்கியம்
இந்தக் கருவி, HPV பரிசோதனைக் கருவியின் உற்பத்தியாளர் குறிப்பிடும் நோக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது (“அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு வெளியான பயன்பாடு”). இதன் பொருள், HPV பரிசோதனைப் பாதுகாப்பற்றது அல்லது நம்பகத்தன்மையற்றது என்று அல்ல; மாறாக, முதலில் குறிப்பிடப்பட்ட பயன்பாட்டிலிருந்து வேறுபட்ட முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில், ஸ்வாப் கருவி மருத்துவமனையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக மக்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், ஆய்வகம் சுயமாகச் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்குப் பொருத்தமான செயல்முறையைப் பயன்படுத்துகிறது.
தொடங்குவதற்கு முன்
-
தொகுப்பில் உள்ள பொருட்களின் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உங்களிடம் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். ஏதேனும் பொருள் காணாமல் போயிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, தொகுப்பைப் பயன்படுத்த வேண்டாம். 0300 303 2724 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.
-
உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்பும், மேற்கொண்ட பிறகும் சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளைக் கழுவவும்.
-
வழிமுறைகளைப் படித்த பிறகு, சுயப் பரிசோதனையை முடிக்க சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
1. கைகளைக் கழுவுதல்
- உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்பும், மேற்கொண்ட பிறகும் சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளைக் கழுவவும்.
2. மூடியை அகற்றுதல்
-
ஒரு கையால் குழாயைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் மூடியைத் திருகி அவிழ்த்து, குழாயிலிருந்து இழுத்து அகற்றவும்.
-
குழாயை வைத்துக் கொள்ளவும். பின்னர் உங்களுக்கு அது தேவைப்படும்.
3. ஸ்வாப் குச்சியைப் பிடித்தல்
-
ஸ்வாப் குச்சியை சிவப்புக் கோட்டில் பிடிக்கவும், இது குச்சியை மிக ஆழமாகச் செருகாமல் இருப்பதை உறுதி செய்யும்.
-
சுயப் பரிசோதனை செய்வதற்கு முன், ஸ்வாப் குச்சி எதையும் தொடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
ஸ்வாப் குச்சியில் உள்ள சிவப்புக் கோட்டை உங்களால் உணர முடியும்.
4. வசதியான நிலையில் இருத்தல்
-
வசதியான நிலையில் இருக்கவும்; உதாரணமாக, டாம்பானைச் செருகும் போது இருக்கும் நிலையைப் போன்ற நிலையில் இருக்கலாம்.
-
நீங்கள் உட்கார்ந்தபடியோ, நின்றபடியோ அல்லது படுத்தபடியோ சுயப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம்.
5. செருகுவதற்குத் தயாராகுதல்
-
கால்களை அகட்டி வைத்து, உங்கள் யோனிக்கு வெளியே உள்ள தோலை மெதுவாக விலக்கவும்.
-
முனையை உங்கள் கீழ் முதுகை நோக்கி வைத்து, ஸ்வாப் குச்சியின் முனையை உங்கள் யோனிக்குள் 5 செ.மீ. மெதுவாகச் செலுத்தவும் (தோராயமாக 2 அங்குலம் அல்லது உங்கள் ஆள்காட்டி விரலின் முதல் இரண்டு மூட்டு நீளத்திற்குச் சமம்).
-
இது சிவப்பு கோட்டுக்குக் கீழே இருக்கும்.
6. ஸ்வாப் குச்சியைச் செருகுதல்
-
ஸ்வாப் குச்சி எளிதாக உள்ளே செல்லவில்லை என்றால், அதைச் செலுத்தும்போது மெதுவாகச் சுழற்றவும். சிவப்பு கோட்டில் இருக்கும் உங்கள் விரல்கள், ஸ்வாப் குச்சியை அதிகமாக உள்ளே செலுத்துவதைத் தடுக்கும்.
-
ஸ்வாப் குச்சியின் முனை உங்கள் கர்ப்பப்பை வாயைத் தொட வேண்டிய அவசியமில்லை.
-
இது அசௌகரியமாக இருக்கக்கூடாது; அசௌகரியமாக இருந்தால் தொடர்ந்து செய்ய வேண்டாம். 0300 303 2724 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.
7. ஸ்வாப் குச்சியை மெதுவாகச் சுழற்றுதல்
-
ஸ்வாப் குச்சியை உங்கள் யோனிக்குள் 20 விநாடிகள் சுழற்றவும்.
-
ஸ்வாப் குச்சியை மெதுவாக வெளியே எடுக்கவும்.
8. ஸ்வாப் குச்சியை குழாயில் வைத்தல்
-
ஸ்வாப் குச்சியை மீண்டும் குழாயுக்குள் வைக்கவும்.
-
கிளிக் என்ற ஒலி கேட்கும் வரை மூடியை குழாயின் மீது அழுத்திப் பொருத்தவும்.
9. லேபிளைப் பூர்த்தி செய்தல்
- ஒரு பேனாவைப் பயன்படுத்தி, உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொண்ட தேதியை SafeTPouch-ன் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள லேபிளில் எழுதவும்.
10. உங்கள் மாதிரி சேகரிப்புக் குழாயை அஞ்சலில் அனுப்புவதற்குத் தயார் செய்தல்
-
உங்கள் மாதிரி சேகரிப்புக் குழாயை SafeTPouch-க்குள் வைக்கவும்.
-
மஞ்சள் பட்டையை அகற்றி, மேல்பகுதியை மடித்து மூடவும்; உங்கள் குழாய் அதற்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
-
வழிமுறைகள் SafeTPouch-ன் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
11. SafeTPouch-ஐ உறைக்குள் வைத்தல்
- SafeTPouch-ஐ திருப்பி அனுப்புவதற்கான உறைக்குள் வைத்து, உறையை மூடவும்.
12. அஞ்சல் பெட்டியில் இடுதல்
- உங்கள் சுயப் பரிசோதனையை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குள், எந்தவொரு UK அஞ்சல் பெட்டியிலும் இதைச் சேர்த்து அனுப்பவும்.