கருப்பை வாய் பரிசோதனை: பரிசோதனை செய்ய பரிசீலிக்கும் பெண்களுக்கான துண்டுப்பிரசுரம் (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 1 ஜூலை 2025
Applies to England
கருப்பை வாய் பரிசோதனையில் பங்கேற்பது உங்கள் விருப்பம். அதைத் தீர்மானிக்க உதவவே இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. கருப்பை வாய் பரிசோதனை இதற்கு முன்பு ‘ஸ்மியர் பரிசோதனை’ என்று அழைக்கப்பட்டது.
1. NHS ஏன் கருப்பை வாய் பரிசோதனையை வழங்குகிறது
உங்கள் கருப்பை வாயின் ஆரோக்கியத்தைச் சரிபார்க்கவும், கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும் நாங்கள் கருப்பை வாய் பரிசோதனையை வழங்குகிறோம். அதிக ஆபத்துள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) உள்ளதா என்று நாங்கள் பரிசோதிப்போம். ஏனென்றால் கருப்பை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடிய அசாதாரண மாற்றங்களை இது ஏற்படுத்தும்.
எந்தவொரு மாற்றங்களையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதும் சிகிச்சையளிப்பதும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதைப் பெரும்பாலும் தடுக்கும். கருப்பை வாய் புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையும், கருப்பை வாய் உள்ள 45 வயதிற்குட்பட்டவர்களையும் பாதிக்கிறது, ஆனால் அசாதாரண மாற்றங்கள் எந்த வயதிலும் ஏற்படலாம்.
UKயில் ஒவ்வொரு ஆண்டும் கருப்பை வாய் பரிசோதனை ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது.
வழக்கமான கருப்பை வாய் பரிசோதனை அவசியமாகும். பின்வரும் சூழல்களிலும், உங்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது:
-
HPV தடுப்பூசி போட்டிருத்தல்
-
1 பாலியல் துணைவர் மட்டுமே இருத்தல்
-
உடல்ரீதியாக முழுமையான உடலுறவு கொள்ளாமல் இருத்தல்
-
ஒரே துணைவரைக் கொண்டிருத்தல், நீண்ட நாட்கள் உடலுறவு கொள்ளாமல் இருத்தல்
-
லெஸ்பியன் அல்லது இருபாலினர்
-
டிரான்ஸ் நபர் அல்லது கருப்பை வாய் கொண்ட பைனரி அல்லாத நபர்
-
கருப்பை வாயை முற்றிலும் அகற்றாமல் ஒரு பகுதியை மட்டும் ஹிஸ்டெரெக்டோமி செய்திருத்தல்
ஒட்டுமொத்த ஹிஸ்டெரெக்டோமி உங்களுக்குச் செய்யப்பட்டிருந்து, கருப்பை அல்லது கருப்பை வாய் இல்லாமல் இருத்தல். இந்தச் சூழலில் உங்களுக்குக் கருப்பை வாய் பரிசோதனை தேவையில்லை என்று அர்த்தம்.
2. கருப்பை வாய் பரிசோதனைக்கு நாங்கள் யாரை அழைக்கிறோம்
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் 25 முதல் 64 வயதிற்குட்பட்ட பெண்களை நாங்கள் வழக்கமாக அழைக்கிறோம். பெரும்பாலான கருப்பை வாய் புற்றுநோய்கள் இந்த வயதிற்குள்தான் ஏற்படுகின்றன.
உங்கள் GP மருத்துவர் உங்கள் தொடர்புத் தகவலை எங்களுக்கு வழங்குவார். அவரிடம் வழங்கப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இவை உட்பட:
-
பெயர்
-
பிறந்த தேதி
-
முகவரி
-
மொபைல் எண்
-
மின்னஞ்சல் முகவரி
கருப்பை வாய் பரிசோதனைக்கு முன்பதிவு செய்வது குறித்த தகவல்களை இந்த அழைப்பில் நீங்கள் பார்க்கலாம். அழைப்பைப் பெற்றதுமே நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
கருப்பை வாய் கொண்ட டிரான்ஸ் ஆண்கள் மற்றும் பைனரி அல்லாத நபர்களும் கருப்பை வாய் பரிசோதனைக்குத் தகுதிபெறுவார்கள். GP நோயாளிப் பதிவில் உங்கள் பாலினம் எப்படிப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து நீங்கள் அழைக்கப்படுவீர்கள்:
-
நீங்கள் பெண் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், தானாகவே அழைப்புகளைப் பெறுவீர்கள்.
-
இல்லையென்றால், வழக்கமான அழைப்புகளைப் பெற நீங்கள் “ஒப்புதல் அளிக்கலாம்”. உங்கள் GP, பாலியல் சுகாதார மருத்துவமனை, திருநங்கை சுகாதார மருத்துவமனை போன்ற கருப்பை வாய் பரிசோதனை வழங்குநரைத் தொடர்புகொண்டு நீங்கள் ஒப்புதலை வழங்கலாம்.
உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் GPஐத் தொடர்புகொள்ளுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். திருநங்கைகள் மற்றும் பைனரி அல்லாதவர்களுக்கான பரிசோதனை பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
3. கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் HPV
கருப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் எந்த இடத்திலும் காணப்படும் ஒரு புற்றுநோயாகும்.
கருப்பை வாய் என்பது உங்கள் யோனியில் இருந்து உங்கள் கருப்பைக்கு உள்ள திறப்பாகும். இது இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாகும், சில நேரங்களில் கருப்பைக் கழுத்து என்றும் இது அழைக்கப்படுகிறது.

கருப்பை வாயின் நிலையைக் காட்டும் வரைபடம்
கிட்டத்தட்ட அனைத்து கருப்பை வாய் புற்றுநோய்களும் சில உயர் ஆபத்து வகையைச் சேர்ந்த மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) நோய்த்தொற்றால் ஏற்படுகின்றன.
HPV என்பது மிகவும் பொதுவான வைரஸ் குழுவிற்கான பெயர். பெரும்பாலான HPV வைரஸ்கள் குறைந்த ஆபத்து கொண்டவை, அவை எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
HPV வைரஸ்கள் எளிதில் பரவக்கூடியவை. எந்தவொரு பாலியல் தொடர்பிலிருந்தும் நீங்கள் HPVஐப் பெறலாம், அவற்றுள்:
-
பிறப்புறுப்பு பகுதியின் நேரடித் தொடர்பு
-
யோனி, குதம் அல்லது வாய்வழிப் பாலுறவு
-
செக்ஸ் பொம்மைகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
நீங்கள் முழுமையான உடலுறவு கொண்டிருக்கவில்லை என்றாலும் உங்களுக்கு HPV தொற்று ஏற்படலாம். பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் சில வகையான HPVஐப் பெறுகிறார்கள். இதைப் பற்றி வெட்கப்படவோ தர்மசங்கடப்படவோ தேவையில்லை.
நீங்கள் பாலியல் ரீதியாகச் செயல்திறனுடன் இல்லாவிட்டாலும் சரி, புதிய துணைவர் இதுவரை இல்லாவிட்டாலும் சரி, பல ஆண்டுகளாக உங்களுக்கு HPV தொற்று இருக்கலாம். HPV எப்போதும் அறிகுறிகளை வெளிப்படுத்தாது, எனவே உங்களுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் அது உங்களுக்குத் தெரியாமலேயே இருக்கலாம்.
பொதுவாக HPV தொற்றை உங்கள் உடல் தானாகவே அகற்றிவிடும். ஆனால் அதிக ஆபத்துள்ள HPV உங்கள் உடலில் இருந்தால், அது உங்கள் கருப்பை வாயில் உள்ள உயிரணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். சிகிச்சை பெறாவிட்டால் இந்த மாற்றங்கள் கருப்பை வாய் புற்றுநோயாக மாறிவிடலாம்.
அதிக ஆபத்துள்ள HPV தொற்று உங்களுக்கு இல்லையென்றால், கருப்பை வாய் புற்றுநோய் உங்களுக்கு ஏற்பட சாத்தியமில்லை. இதற்கு முன்பு உங்கள் கருப்பை வாயில் அசாதாரண செல் மாற்றங்கள் இருந்திருந்தாலும் இது பொருந்தும்.
4. கருப்பை வாய் பரிசோதனை செய்யப்படும் விதம்
கருப்பை வாய் பரிசோதனை பொதுவாக ஒரு பெண் செவிலியர் அல்லது மருத்துவரால் செய்யப்படும். நீங்கள் முன்பதிவு செய்யும்போது ஒரு பெண் மருத்துவ நிபுணர் தேவை என்று சொன்னால், உங்கள் GP மருத்துவரோ பாலியல் ஆரோக்கிய மருத்துவமனை ஊழியரோ அதை உறுதிசெய்வார்கள்.
ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக மென்மையான பிரஷ் பயன்படுத்தி உங்கள் கருப்பை வாயிலிருந்து செல்களின் மாதிரியை அவர்கள் எடுப்பார்கள். அதன் பிறகு, பெரும்பாலானோருக்கு மேலதிகப் பரிசோதனைகள் தேவையில்லை.
உங்கள் மாதிரியில் அதிக ஆபத்து HPV இருப்பது கண்டறியப்பட்டால், உயிரணுக்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்பதையும் நாங்கள் பரிசோதிப்போம். கருப்பை வாய் பரிசோதனை முடிவுகளை மிகவும் துல்லியமாக்க இது உதவும்.
நாங்கள் மாற்றங்களைக் கண்டறிந்தால், உங்கள் கருப்பை வாயை இன்னும் நெருக்கமாகப் பார்க்க கோல்போஸ்கோபி எனப்படும் வேறொரு பரிசோதனை உங்களுக்குத் தேவைப்படலாம். உங்களுக்குத் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கலந்துரையாட நாங்கள் உங்களுடன் ஒரு முன்பதிவைச் செய்வோம்.
5. உங்கள் முன்பதிவின்போது
உங்கள் பரிசோதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை செவிலியர் அல்லது மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்:
-
இடுப்பிலிருந்து கீழ் உடல் முழுவதும் உடைகளைக் களைய தனியே ஓர் இடம் இருக்கும். நீண்ட ஜம்பர், டிரெஸ், பாவாடை போன்ற உங்களுக்கு வசதியான ஓர் உடையை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
-
பரிசோதனையின்போது உங்கள் இடுப்பிற்குக் கீழே விரித்துக்கொள்ள ஒரு பேப்பர் ஷீட் அல்லது டவல் உங்களுக்கு வழங்கப்படும்.
-
உங்கள் கால்களை மடக்கி மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும், பாதங்களை ஒன்றிணைத்து வைத்து முழங்கால்களை விரித்துவைக்க வேண்டும். பக்கவாட்டில் திரும்பிப் படுப்பது போன்ற வேறொரு நிலையில் இருக்கும்படியும் உங்களிடம் கேட்கப்படலாம். சில நேரங்களில், பரிசோதனையின்போது நீங்கள் நிலையை மாற்ற வேண்டியிருக்கலாம்.
-
ஸ்பெகுலம் எனப்படும் மென்மையான, குழாய் வடிவக் கருவியை செவிலியர் அல்லது மருத்துவர் உங்கள் யோனியில் மெதுவாக வைப்பார். அசெளகரியத்தைக் குறைக்க அவர்கள் சிறிய அளவு லூப்ரிகன்ட் பயன்படுத்தலாம். சிறிய ஸ்பெகுலத்தைப் பயன்படுத்தும்படியும் நீங்கள் கேட்கலாம். ஸ்பெகுலத்தை முதலில் நீங்களே உள்நுழைக்கும்படியும் நீங்கள் கேட்கலாம்.
-
உங்கள் கருப்பை வாயைப் பார்க்க அவர்கள் ஸ்பெகுலத்தைத் திறப்பார்கள். மென்மையான பிரஷ் பயன்படுத்தி, அவர்கள் உங்கள் கருப்பை வாயில் இருந்து செல்களின் சிறு மாதிரியை எடுப்பார்கள். நீங்கள் சிறிது அசெளகரியத்தை உணரலாம். ரிலாக்ஸ் செய்துகொள்ள நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.
-
அவர்கள் ஸ்பெகுலத்தை மூடி அகற்றிய பிறகு, ஆடை அணிந்துகொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். லூப்ரிகன்ட்டைத் துடைக்க உங்களுக்கு டிஷ்யூ பேப்பர் வழங்கப்படும்.
கருப்பை வாய் பரிசோதனைக்கு 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கும். முழு முன்பதிவிற்கும் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
உங்களுக்கு உதவ செவிலியர் அல்லது மருத்துவர் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பார். நண்பர், உறவினர், துணைவர், உதவித் தொழிலாளி போன்ற எவரையும் உங்களுடன் அழைத்து வரலாம். உங்கள் முன்பதிவின்போது அவர்கள் உங்களுடன் அறையில் இருக்கலாம்.
பரிசோதனைக்கு முன் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், செவிலியர் அல்லது மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் மிகவும் சௌகரியமாக உணர உதவும் வகையில் மாற்றங்களைச் செய்யும்படி கேட்கலாம், மேலும் உங்களுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதைச் சொல்ல வேண்டும்.
NHS.UK தளத்தில் கருப்பை வாய் பரிசோதனை வீடியோவை நீங்கள் பார்க்கலாம். உடலின் உட்புறத்தின் விரிவான காட்சியை நீங்கள் அதில் பார்க்கலாம். மேலும் பரிசோதனையின்போது என்ன நடக்கும் என்பதும் வீடியோவில் விளக்கப்பட்டிருக்கும்.
6. நடைமுறைக் குறிப்புகள் மற்றும் உதவி
கருப்பை வாய் பரிசோதனையை மேற்கொள்ள உங்களுக்கு உதவி தேவைப்படலாம். நீங்கள் முன்பதிவு செய்யும் போதுபின்வருவன போன்ற ஏதேனும் நியாயமான மாற்றங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் GP மருத்துவர் அல்லது பாலியல் ஆரோக்கிய மருத்துவமனை ஊழியரிடம் தெரிவியுங்கள்:
-
நீண்டநேர அல்லது இரட்டை முன்பதிவு
-
பிற மொழிகள் அல்லது வடிவங்களில் தகவல்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்
-
அறையில் உங்களுடன் ஓர் உதவியாளர் (Chaperone) அல்லது பயிற்சி பெற்ற ஊழியர்
-
உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒரு நம்பகமான மருத்துவர் அல்லது செவிலியருடன் முன்பதிவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
-
உங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது உங்கள் பரிசோதனையை முன்பதிவு செய்யுங்கள் - இரத்தப்போக்கிற்கு 2 நாட்களுக்கு முன்பும் பின்பும் இதில் அடங்கும்
-
அசாதாரண யோனி வெளியேற்றம் அல்லது பெல்விக் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை முடியும் வரை காத்திருங்கள்
-
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா அல்லது கர்ப்பமாக இருக்க சாத்தியமுள்ளதா என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள், ஏனெனில் உங்கள் பரிசோதனையைத் தாமதப்படுத்த வேண்டியிருக்கலாம்
பெரும்பாலானோர் கருப்பை வாய் பரிசோதனைக்கு 2 நாட்களுக்கு முன்பு யோனி மருந்துகள், லூப்ரிகன்ட் மற்றும் கிரீம்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும். இருப்பினும், யோனி வறட்சி காரணமாக பரிசோதனை கடினமாகிவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், பரிசோதனைக்கு முன் யோனி ஈஸ்ட்ரோஜன் கிரீம் அல்லது பெஸ்ஸரியை அவர்கள் பரிந்துரைக்கலாம்.
சிலர் கருப்பை வாய் பரிசோதனை குறித்து கவலைப்படுவது நியாயமானதே. மன ஆரோக்கியம், கடந்தகால அதிர்ச்சிகர அனுபவங்கள், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது குடும்ப வன்முறை காரணமாக இந்தக் கவலை ஏற்படலாம். கர்ப்பப்பை வாய் பரிசோதனையின் முழுக் கட்டுப்பாடும் உங்கள் கையில் உள்ளது. GOV.UK தளத்தில் முன்பதிவில் பங்கேற்கக் கடினமாக உணர்பவர்களுக்கான எங்கள் வழிகாட்டுதலைப் படித்துப்பாருங்கள்.
7. கருப்பை வாய் பரிசோதனை முடிவுகள்
முடிவுகள் எப்போது பெறப்படும் என்று செவிலியர் அல்லது மருத்துவர் உங்களுக்குச் சொல்வார். 3 சாத்தியமான முடிவுகள் உள்ளன:
-
HPV தொற்று
-
HPV தொற்று உள்ளது, அசாதாரண செல்கள் இல்லை
-
HPV தொற்று உள்ளது மற்றும் அசாதாரண செல்கள் உள்ளன
சில நேரங்களில் உங்கள் மாதிரியிலிருந்து முடிவைப் பெற முடியாமல் போகலாம். இது நடந்தால், 3 மாதங்களில் மற்றொரு கருப்பை வாய் பரிசோதனைக்கு நாங்கள் உங்களை அழைப்போம். எதுவும் தவறு என்று அர்த்தமல்ல.
7.1 HPV தொற்று இல்லை
பெரும்பாலானோர் (சுமார் 100 பேரில் 87 பேர்) இந்த முடிவைப் பெறுகின்றனர்.
உங்கள் மாதிரியில் அதிக ஆபத்து HPVஐ நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தம்.
கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவு. கருப்பையில் அசாதாரண செல் மாற்றங்கள் உள்ளனவா என்று உங்கள் மாதிரியை நாங்கள் பரிசோதிக்கத் தேவையில்லை.
நாங்கள் வழக்கமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனைக்கு வரும்படி மீண்டும் உங்களை அழைப்போம். முந்தைய பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிலர் விரைவில் அழைக்கப்படலாம். உங்கள் முடிவுகள் கடிதம் இதை உறுதிப்படுத்தும்.
7.2 HPV தொற்று உள்ளது, அசாதாரண செல்கள் இல்லை
100 பேரில் சுமார் 9 பேர் இந்த முடிவைப் பெறுகின்றனர்.
உங்கள் மாதிரியில் அதிக ஆபத்து HPVஐக் கண்டறிந்துள்ளோம் என்று அர்த்தம், ஆனால் அசாதாரண உயிரணு மாற்றங்கள் எதுவும் இல்லை.
1 வருடத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உங்களை அழைப்போம். அதிக ஆபத்துள்ள HPV தொற்று உங்கள் உடலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்த, முன்கூட்டியே வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொற்று அகற்றப்பட்டுவிடும்.
அதிக ஆபத்துள்ள HPV தொற்று தொடர்ந்து உங்களுக்கு இருந்து, அசாதாரண செல் மாற்றங்கள் ஏதுமில்லை என்றால், 1 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைக்கு வரும்படி உங்களை அழைப்போம். 2 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்களுக்கு அதிக ஆபத்துள்ள HPV தொற்று இருந்தால், உங்கள் கருப்பை வாயை இன்னும் நெருக்கமாகப் பார்க்க கோல்போஸ்கோபி பரிசோதனைக்கு உங்களை அழைப்போம்.
7.3 HPV தொற்று உள்ளது மற்றும் அசாதாரண செல்கள் உள்ளன
சுமார் 100 பேரில் 4 பேர் இந்த முடிவைப் பெறுகின்றனர்.
உங்கள் மாதிரியில் அதிக ஆபத்துள்ள HPV தொற்று இருந்து, கருப்பை வாய் செல்களில் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்துள்ளோம் என்பதே இதன் பொருள். உங்கள் முடிவுகள் கடிதம் இதை இன்னும் விரிவாக விளக்கும்.
கோல்போஸ்கோபி பரிசோதனைக்கு உங்களைப் பரிந்துரைப்போம். இது கருப்பை வாய் பரிசோதனை போன்றதுதான், ஆனால் இது மருத்துவமனையில் செய்யப்படும். நிபுணத்துவம் பெற்ற செவிலியர் அல்லது மருத்துவர், உருப்பெருக்கி லென்ஸைப் பயன்படுத்தி உங்கள் கருப்பை வாயைப் பார்ப்பார். இது கோல்போஸ்கோப் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது உடலுக்கு வெளியே இருக்கும். தேவைப்பட்டால், அவர்கள் பயாப்ஸி எனப்படும் சிறிய திசு மாதிரியை எடுத்துக் கொள்ளலாம். NHS.UK தளத்தில் கோல்போஸ்கோபி பரிசோதனை பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் படிக்கலாம்.
கோல்போஸ்கோபி பரிசோதனையை மேற்கொண்ட பெரும்பாலோருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இல்லை.

கருப்பை வாய் பரிசோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு 100 பேருக்கும் பெறப்பட்ட முடிவுகள்
NHS உங்கள் முடிவை தேசியத் தரவுத்தளத்தில் பதிவு செய்யும். இதன் மூலம் உங்கள் வழக்கமான பரிசோதனை முடிவுகளை எங்களால் ஒப்பிட முடியும். உங்கள் மாதிரியை 10 ஆண்டுகளுக்கு வைத்திருப்போம்.
8. கருப்பை வாய் பரிசோதனையின் சாத்தியமான அபாயங்கள்
எந்தப் பரிசோதனையும் 100% நம்பகமானது அல்ல.
கருப்பை வாய் பரிசோதனையில், இது எதனால் என்றால்:
-
HPV தொற்று அல்லது அசாதாரண செல்கள் சில நேரங்களில் தவறவிடப்படலாம் (‘தவறான எதிர்மறை - False Positive’ முடிவு)
-
கருப்பை வாய் இயல்பாக இருக்கும்போது அசாதாரண செல்கள் காணப்படுகின்றன என்று ஒரு முடிவு கூறுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது (‘தவறான எதிர்மறை - False Positive’ முடிவு)
-
பரிசோதனைகளுக்கு இடையே அசாதாரண செல்கள் உருவாகி புற்றுநோயாக மாறும் சிறிய அபாயம் உள்ளது
கருப்பை வாய் பரிசோதனை என்பது அண்டச் சுரப்பி, கருப்பை, சினைப்பை அல்லது பிறப்புறுப்பு புற்றுநோய் போன்ற இனப்பெருக்க அமைப்பின் பிற புற்றுநோய்களுக்கான பரிசோதனை அல்ல. உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் ஒரு GPஐத் தொடர்புகொள்ளத் தயங்க வேண்டாம்.
8.1 கோல்போஸ்கோபி பரிசோதனையில் உள்ள சாத்தியமான அபாயங்கள்
பெரும்பாலானோருக்கு கோல்போஸ்கோபி பரிசோதனைக்கான பரிந்துரை தேவையில்லை, மேலும் அசாதாரண செல்கள் அகற்றப்பட தேவையில்லை. உங்களுக்கு செல்கள் அகற்றப்பட வேண்டியிருந்தால், ரத்தப்போக்கு மற்றும் தொற்று ஏற்படும் சிறிய அபாயம் உள்ளது. உங்களுக்கு கோல்போஸ்கோபி தேவையா என்பதை தீர்மானிக்க உதவும் கூடுதல் தகவல்களைப் பெறுவீர்கள்.
9. கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்
கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளில் அடங்குபவை:
-
அசாதாரணமான இரத்தப்போக்கு
-
உடலுறவின்போது அல்லது அதற்குப் பிறகு, உங்கள் மாதவிடாய்களுக்கு இடையே அல்லது மெனோபாஸ் ஏற்பட்ட பிறகு ரத்தப்போக்கு (மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பிறகு 12 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல்)
-
வழக்கத்தைவிட அதிக ரத்தப்போக்குடன் மாதவிடாய் ஏற்படுதல்
-
பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தில் மாற்றங்கள்
-
உடலுறவின்போது வலி
-
உங்கள் கீழ் முதுகில், உங்கள் இடுப்பு எலும்புகளுக்கு இடையில் (பெல்விஸ்) அல்லது உங்கள் கீழ் வயிற்றில் வலி
இந்த அறிகுறிகள் மிகவும் பொதுவானவை மற்றும் பல காரணங்களால் இவை ஏற்படலாம், ஆனால் இவற்றை GP மருத்துவருடன் அதுகுறித்துக் கலந்துரையாட வேண்டியது அவசியம். புற்றுநோய்தான் காரணம் என்றால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது சிகிச்சையை இன்னும் செயல்திறனுடன் ஆக்கும்.
ஃபைப்ராய்டு, எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிற உடல்நிலைகள் உங்களுக்கு இருந்து, உங்கள் அறிகுறிகள் மாறினால், மோசமடைந்தால் அல்லது அசாதரணமாக உணர்ந்தால் உங்கள் GPஐப் பார்க்கவும்.
10. கருப்பை வாய்ப்பு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்கள்
கருப்பை வாய் புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையும், கருப்பை வாய் உள்ள 45 வயதிற்குட்பட்டவர்களையும் பாதிக்கிறது, ஆனால் இது எந்த வயதிலும் ஏற்படலாம்.
பின்வரும் சூழல்களில் உங்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்:
-
நீங்கள் 45 வயதிற்குட்பட்டவர் - கருப்பை வாய் புற்றுநோய் இளம் வயதினருக்கு மிகவும் பொதுவாக ஏற்படுகிறது
-
உங்களுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது, எடுத்துக்காட்டாக உங்களுக்கு HIV அல்லது எய்ட்ஸ் உள்ளது
-
நீங்கள் பல குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள் அல்லது சிறு வயதிலேயே (17 வயதிற்குள்) குழந்தைகளைப் பெற்றிருக்கிறீர்கள்
-
நீங்கள் கருவில் இருந்தபோது உங்கள் தாய் ஹார்மோன் மருந்து (டைஎத்தில் ஸ்டில்பெஸ்ட்ரோல்) எடுத்திருத்தல்
-
கடந்த காலத்தில் உங்களுக்கு யோனி, பிறப்புறுப்பு, சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோய் இருந்திருத்தல்
-
நீங்கள் புகைபிடிப்பவர்
-
நீங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேல் கருத்தடை மாத்திரை எடுத்திருத்தல் - இது உங்கள் ஆபத்தைச் சற்று அதிகரிக்கும்
ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், புகைப்பதை நிறுத்துவதன் மூலமும், சமச்சீரான உணவை உண்பதன் மூலமும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான சாத்தியத்தைக் குறைக்க முடியும்.
உங்கள் கருப்பை மற்றும் கருப்பை வாய் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராது.
11. கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் HPV தடுப்பூசி
கருப்பை வாய் புற்றுநோய்களை ஏற்படுத்தும் பெரும்பாலான HPV வைரஸில் இருந்து பாதுகாக்க HPV தடுப்பூசி உதவுகிறது.
இது 12 முதல் 13 வயது வரையிலான பிள்ளைகளுக்கும், HPV நோய் ஏற்படுவதற்கான அதிக அபாயத்தில் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் தகுதிபெற்றிருந்தாலும், 12 அல்லது 13 வயதில் தடுப்பூசி போடத் தவறவிட்டால், உங்கள் GP மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
நீங்கள் HPVக்கு எதிராகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், கருப்பை வாய் பரிசோதனை முன்பதிவில் கலந்து கொள்வது அவசியமாகும். இது எல்லா வகையான HPV தொற்றில் இருந்தும் உங்களைப் பாதுகாக்காது என்பதால், கருப்பை வாய் புற்றுநோயைப் பெறுவதற்கான ஒரு சிறு சாத்தியம் உங்களுக்கு இருக்கலாம்.
கருப்பை வாய் பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசிகள் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படாதபடி சிறந்த தடுப்பை அளிக்கின்றன.
12. மருத்துவ ஆய்வுகள்
மருத்துவ ஆய்வில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று உங்களிடம் கேட்கப்படலாம். இவை மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகள் ஆகும். நீங்கள் பங்கேற்க அழைக்கப்படும் எந்தவொரு பரிசோதனையும், மிகவும் பயனுள்ள பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும், இது எதிர்காலத்தில் சேவைகளை மேம்படுத்த எங்களுக்கு உதவும். பங்கேற்கலாமா இல்லையா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
13. மேலும் தகவல் மற்றும் உதவி
கருப்பை வாய் பரிசோதனை குறித்த ஆலோசனைக்கு, உங்கள் GP மருத்துவர் அல்லது பாலியல் ஆரோக்கிய கிளினிக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
பிற மொழிகள் உட்பட மாற்று வடிவங்களில் இந்தத் தகவல் கிடைக்கிறது. எளிதாகப் படிக்கும் வடிவிலும் இது கிடைக்கிறது.
வேறொரு வடிவமைப்பைக் கோர விரும்பினால், 0300 311 22 33 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது england.contactus@nhs.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இவற்றையும் நீங்கள் செய்யலாம்:
-
கருப்பை வாய் பரிசோதனை குறித்த கூடுதல் தகவல்களைப் படித்துப் பார்க்கலாம்
-
முன்பதிவில் பங்கேற்கக் கடினமாக உணர்பவர்களுக்கான எங்கள் வழிகாட்டுதலைப் படித்துப் பார்க்கலாம்
-
திருநங்கை மற்றும் பைனரி அல்லாதவர்களுக்கான NHS பரிசோதனைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் பக்கத்தைப் படித்துப் பார்க்கலாம்
Eve Appeal என்பது ஒரு மகளிர் புற்றுநோய் தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் கருப்பை வாய் பரிசோதனை குறித்த இலவச மற்றும் ரகசியமான ஆலோசனையை வழங்குகிறது. nurse@eveappeal.org.uk என்ற முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 0808 802 0019 என்ற எண்ணை அழைக்கலாம்.
பரிசோதனைக்கான ஒப்புதலை நீக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.