உலகச் செய்தி

யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதானது ஒரு கட்டமைப்பு மாதிரியைத் தகர்ப்பதற்கு எங்களைத் தேவைப்படுத்துகிறது

- கௌரவ. வில்லியம் ஹேக், வெளியுறவுத்துறை மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலர் மற்றும் அஞ்சலினா ஜோலி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளரின் விசேட பிரதிநிதி

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
William Hague

William Hague

உங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உங்களது வீட்டிலிருந்து ஆயுதம் தாங்கியவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதையோ, அல்லது பாலியல் அடிமைத் தொழிலுக்கு விற்கப்படுவதையோ, அல்லது சிறையிலடைக்கப்பட்டு பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுவதையோ காணுவது பற்றி எண்ணிப் பாருங்கள்.
அது உங்களது நாட்டிலுள்ள ஏனைய பல்லாயிரக் கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்வதையும் மற்றும் அவர்கள் அந்த ஆபத்தான மற்றும் மன வதிர்ச்சியான சூழலில் வாழ்வதையும் கற்பனை செய்து பாருங்கள். குற்றமிழைத்த அந்தக் காமுகர்கள் தங்களது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் சுதந்திரமாக நடமாடித் திரிவதற்கு அனுமதிக்கப்படின், நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள் என்பதையும் கற்னை செய்து பாருங்கள்.
யுத்த வலய பாலியல் வன்முறைகளில் சிக்கிப் பிழைத்த மில்லியன் கணக்கானவர்களின் உண்மைநிலை இதுவேயாகுமென்பதோடு எங்களது பிரச்சாரத்துக்கான காரணமும் இதுவேயாகும்.
ஒரு குறிப்பிட்ட நாடான பொஸ்னியாவுடனான எங்களது நெருக்கம் காரணமாக நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். அங்கு, நான்கு வருட யுத்த மோதல்களின் போது சுமார் 50,000 பெண்கள் மற்றும் எண்ணிக்கையளவு தெரியாத ஆண்கள் ஆகியோர் பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பொஸ்னியா ஐரோப்பாவின் மையப் பகுதியிலுள்ள, உலகின் மிகவும் ஸ்திரமான மற்றும் அமைதியான பிராந்தியமாகும். ஆனால், அந்த பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானவர்களுக்கான நீதியின்றி இருபது வருடங்கள் கடந்து விட்டன.
எங்களது வாழ்நாட்களில், ஒவ்வொரு கண்டத்திலும் மற்றும் ஒவ்வொரு பெரும் யுத்த மோதல்களிலும் பாலியல் வல்லுறவென்பது ஒரு யுத்த ஆயுதமாக திரும்பத் திரும்ப உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. அது பாலுணர்வுடனான உறவுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல, அது அதிகாரம், மற்றும் வெற்றியினால் கீழ்ப்படுத்தி, அவமானப்படுத்தும் அவா என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது.
இந்த செயற்பாடுகளின் தன்மை, இரு பாலினங்களிலிருந்தும் பாலியல் வல்லுறவுகளில் தப்பிப்பிழைத்த பலரை – வாழ்க்கை முழுவதற்கும் தனிமைப்படல், புறந்தள்ளப்படல் மற்றும் அச்சம் ஆகிய உணர்வுகளுக்கு உள்ளாக வைக்கிறது. சில நாடுகளில், பாலியல் வல்லுறவுகளில் தப்பிப்பிழைத்தவர்கள் விபச்சாரிகளாகக் கருதப்பட்டும் மற்றும் மண வாழ்க்கை நிராகரிக்கப்பட்டு அதற்குத் தகுதியற்றவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
சமூக ஏற்றுக்கொள்ளுதலின்றி, பலர் வெட்கம் மற்றும் உளவியல் ரீதியான துன்பங்களால் பீடிக்கப் பட்டுள்ளதுடன் உடல்ரீதியான காயங்களால் வடுவேற்படுத்தப்பட்டும் உள்ளனர்.
சட்டரீதியான அங்கீகாரமின்றி, அவர்கள் அநேகம் நிதிரீதியான உதவி, சுகாதாரப் பராமரிப்பு, அல்லது அவர்களது அனுபவங்களிலிருந்து மீள்வதற்குத் தேவையான உளவளத்துணை அற்றவர்களாகவும் உள்ளனர்.
பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்கள் அநேகமாக சிறுவர்களாவர்; அவர்களின் உடல், மனம் மற்றும் எதிர்காலம் என்பன சீர்செய்ய முடியாதளவிற்கு சேதமாக்கப்பட்டிருக்கலாம்.
அந்த அவமானத்தின் அத்தகைய சிதைத்து அழிக்கும் சக்தி, பாலியல் வல்லுறவுகள் மூலமாகப் பிறந்த குழந்தைகள், அல்லது தப்பிப் பிழைத்தவர்களின் குடும்பங்கள் என அடுத்த தலைமுறைக்கும் கூட அநேகம் இணைக்கப்படுகிறது.
யுத்த வலய பாலியல் வல்லுறவுகளைச் சுற்றியுள்ள இந்த சக்திமிக்க சமூக ஒதுக்கப்படல், அதன் அளவும் தீவிரத்தன்மையும் ஏன் பரந்தளவிற்குப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பதையும் விளக்குகிறது.
ஆனால் எங்களது சொந்த அனுபவத்திலிருந்து இந்தக் கதைகளைக் கேட்கும் எவரும், அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தங்களது ஆன்மா துடித்து பதைபதைப்தைக் காண்பர்.
யுத்த மோதல்களில் தங்களது உயிர்களை ஈந்த மக்களுக்காக உலகம் முழுவதிலுமாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன.
கடந்த நூறு வருடங்களில் யுத்த மோதல்களில் சிக்கிப் பிழைத்த அனைவரினதும் துயர்களைப் பதிவு செய்வதற்கு எந்தளவு பாரிய கட்டிடம் தேவையாகவிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சிரியா, தென் சூடான், மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் ஏனைய நாடுகளென இந்தப் பெயர்களை வாசிக்கும் பொழுது, இந்தக் குற்றங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய பெயர்கள் அங்கே செதுக்கப்பட வேண்டியதாகவிருக்கும்.
அசைக்க முடியாத பல குற்ற எண்பித்தல்கள் காரணமாக நாங்கள் படைத்தரப்புகளையும் இணைத்துள்ளோம்.
முதலில், பாலியல் வல்லுறவும் மற்றும் பாலியல் வன்முறைகளும் தவிர்க்கமுடியாதவையல்ல, ஆனால் அவை யுத்தத்தின் ஒரு வேண்டுமென்றேயான உத்தி என்பதையும் அவை நிறுத்தபட்டு, தடுக்கப்பட்டும் மற்றும் தண்டிக்கப்படவும் முடியுமானவை என நாங்கள் நம்புகிறோம்.
இரண்டாவதாக, அடிப்படையான பிரச்சினை நீதி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் இந்தக் குற்றங்கள் நடைபெறும் போதும் உலகம் எதனையுமே செய்யவில்லை, பாதிக்கப்படுபவர்கள் நைஜீரியாவின் பாடசாலைச் சிறுமிகளோ அல்லது சிரியாவின் அகதிகளோவாயினும்; பாலியல் வன்முறையை ஒரு குற்றவிலக்களிப்போடு பயன்படுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டு விட்டது.
மூன்றாவதாக, இது ஒழுக்கவியல் சார்ந்தவொரு பொறுப்பு. தாங்கள் மனித உரிமைகளை நம்புவதாகவும் ஆனால் யுத்த மோதல்களில் பாலியல் வன்முறைகளுக்கு பாராமுகமாக இருப்பதைத் தெரிவு செய்வதாகவும் எந்த நாடும் கூறுவதற்கு முடியாது. அத்தோடு அது, ஸ்திரத்தன்மையின்மை ஆயுத மோதல் என்பவற்றுக்கு எண்ணெய் வார்க்கும் ஒரு முக்கியமான வெளிநாட்டுக் கொள்கை விடயமுமாகும். அதனை முடிவுறுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியமாதொன்றாகும். நான்கவதாக, ஆண்கள் மற்றும் சிறுவர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களாக இருக்கையில், பாலியல் யுத்த மோதல்களின் போதான பாலியல் வன்முறையானது அனைத்து இடங்களிலும் பெண்களின் உரிமைகளையே தடுத்து வைத்துள்ளது. துஷ்பிரயோகிக்கும் கணவர்கள் அல்லது கொடுமையான சட்ட முறைமைகளின் கைகளில் பெண்கள் துன்பம் அனுபவிப்பது பற்றி நாம் ஒவ்வொரு நாளுமே வாசிக்கிறோம். யுத்த மோதல்களில் பாலியல் வன்முறை மீதான குற்ற விலக்களிப்பை நாங்கள் தகர்க்க முடியுமாயின், ஏனைய ஏற்பாடுகள் பலவற்றில் பெண்கள் குறித்தான உளப்பாங்குகளில் ஒரு மாற்றத்தை நாம் துரிதப்படுத்த முடியும்.
ஐந்தாவதாக, நாங்களிருவருமே யுத்த மோதல்களின் போதான பாலியல் வன்முறை கட்டுப்படுத்தப்படுவதற்கு மிகவும் பாரிய மற்றும் சிக்கலான ஒரு பிரச்சினை என ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கிறோம். அடிமை வியாபாரம் அல்லது சட்ட விரோத ஆயுத வர்த்தகம் என்பவற்றுக்கும் இதே போன்ற பல கருத்துக்கள் சொல்லப்பட்டன. மக்கள் அபிப்பிராயங்கள் எழுப்பப்பட்டால் அரசாங்கங்கள் தங்களை விரைந்து செயலாற்றச் செய்யும், மாற்றம் விரைவானதாக இருக்கும். இது இப்பொழுது நடைபெறுகின்றது என்பதற்கு சான்றுகள் உள்ளன. யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்காக கடந்த வருடம் நாங்கள் முன்வைத்த ஒரு பற்றுறுதிப் பிரகடனத்தில் அனைத்து உலக நாடுகளின் முக்காற் பங்கிற்கும் அதிகமான நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. மேலும் கடந்த வாரம், யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கு, 100க்கும் அதிகமான அரசாங்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகளின் 8 முகவரமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சுமார் ஆயிரத்தை அண்மித்த நிபுணர்கள் ஆகியோர்களுக்கு லண்டனில் ஒரு உலக உச்சி மகாநாட்டினை நாங்கள் நடாத்தினோம்.
யுத்த மோதல்களிலான பாலியல் வன்முறையை எவ்வாறு ஆவணப்படுத்துவது மற்றும் புலன்விசாரணை செய்வது தொடர்பில் முதலாவது சர்வதேச வரைவுடன்பாட்டை நாங்கள் ஆரம்பித்தோம். அதனை உருவாக்குவதில் ஒரு வருடத்துக்கும் மேலாக நூற்றுக்கும் அதிகமான நிபுணர்களுடன் பணியாற்றியமை, தாக்குதலொன்றின் பின் தகவல்கள் மற்றும் சாட்சியங்ளைப் பாதுகாப்பதற்கு புலன்விசாரணையாளர்களுக்கு உதவும் என்பதோடு, வெற்றிகரமான வழக்குத்தொடருதல்களின் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், மனவதிர்ச்சிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்ளைப் பாதுகாக்கும்.
பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை மீதான தங்களது சட்டங்களை சர்வதேச நியமங்களுடன் இணங்கியதாக கொண்டு வருவதற்கு அனைத்து நாடுகளையும் நாங்கள் கேட்டுள்ளோம். யுத்த வலய பாலியல் வன்முறைகள் என்னவென்பதைப் புரிந்து அவற்றைத் தடுப்பதற்கு அனைத்துப் படைவீர்ர்கள் மற்றும் அமைதி காக்கும் படைவீர்ர்கள் ஆகியோர் பயிற்றுவிக்கப்படுவதற்கு நாங்கள் கோருவோம். அகதிகள் முகாம்களில் வெளிச்ச விளக்குகளைப் பொருத்துதலிருந்து, விறகு சேகரிப்பதற்கு செல்லும் பெண்களுக்கு காவலாகச் செல்வது வரையிலான எளிமையான நடவடிக்கைகள், தாக்குதல்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும், என்பதோடு இந்த அடிப்படையான பாதுகாப்புகள் சர்வதேச ரீதியானளவில் வருவதை நாங்கள் வேண்டுகிறோம்.
பாலியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு அளிக்க வேண்டாமெனவும் மற்றும் ஜோசெப் கொனி போன்ற மிகவும் இழிவான ஆட்களை தொடர்ந்து தேடிக் கண்டுபிடிப்பதற்கும் நாடுகளை நாங்கள் வலியுறுத்துவோம். பாதிப்பில் தப்பிப்பழைத்தவர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுகின்றதும் மற்றும் நாங்கள் தங்கியுள்ள புகழ்ந்து பேசப்படாத அந்த குழுக்கள் என்பவற்றுக்காக புதிய நிதியை நாங்கள் கோரியுள்ளோம்.
ஓரிரவிற்குள், யுத்த வலய பாலியல் வன்முறைகளை இல்லாதொழிக்கும் ஒர் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கோ அல்லது ஒரு உடன்படிக்கை ஏற்று அங்கீகரிக்கப்படுவதற்கோ முடியாது. இது எங்களது தலைமுறைக்கான ஒரு குறிக்கோளாகும். அரசாங்கங்கள் இதனைத் தாங்களாகவே ஒரு போதும் நிறைவேற்றாது என்பதே உண்மை. யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதானது ஒரு கட்டமைப்பு மாதிரியைத் தகர்ப்பதற்கு எங்களைத் தேவைப்படுத்துகிறது. பாரிய உலகப் பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கங்கள், பிரஜைகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து பணியாற்றும், ஒரு புதிய மாதிரி எங்களுக்குத் தேவை.
உலகின் கொடுமையான ஆயுதக் கொட்டகையிலிருந்து யுத்தத்தின் ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையை அகற்றுவது எங்களது சக்தியிலுள்ளது. யுத்த மோதல்களின் பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக அல்லாது, தைரியமான தப்பிப் பிழைத்தவர்களாக நடாத்துவதும் எங்களது கைகளிலேயே உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி 27 June 2014